டெல்லியில் விடிய விடிய கனமழை - 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு!
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி சுழற்சிகளும் மழையை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் மறைமுக தாக்கமாக டெல்லி உள்பட வட மாநிலங்களில் மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் கடுமையான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் மின்டோ சாலை, ஹுமாயூன் சாலை மற்றும் சாஸ்திரி பவன் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின.
இதேபோல் ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மே 23 முதல் மே 25 வரை இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.