''கோவையில் விடிய விடிய கனமழை'' - தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்!
கோவையில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால், நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடியற்காலை 3 மணியிலிருந்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மழை நீர் அகற்றும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படியுங்கள்:மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
பின்னர், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
நகரின் பல்வேறு பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டர் மூலம் அகற்றும் பணியில் நடைபெற்றது. மேலும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மழை நீர் தேங்கும் இடங்களான லங்கா கார்னர், உப்பிலிபாளையம், கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களை கண்டறிந்து மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்ட உத்தரவிட்டுள்ளேன்.
மழைக்கு பின்னர் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் காய்ச்சல் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கும்பட்சத்தில் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ள புகார் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த புகார் எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.