கனமழை எதிரொலி | காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என கூறப்பட்டது. இதையடுத்து, வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்த சூழலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 120 அடியாக உள்ளதால் அணையில் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படும். அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 45,000 கனஅடி வரை திறந்து விடப்பட்டுள்ளது எனவும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக வினாடிக்கு 60,000 கனஅடி வரை அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.