For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கடலோர மாவட்டங்களில் கனமழை | புயலின் நேரடி தாக்கம் இருக்குமா? -வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

08:25 AM Nov 30, 2023 IST | Web Editor
கடலோர மாவட்டங்களில் கனமழை     புயலின் நேரடி தாக்கம் இருக்குமா   வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன
Advertisement

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் என்ன? வானிலை முன் அறிவிப்பின்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயலின் நேரடி தாக்கம் இருக்குமா? இதோ விரிவாக விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இடி மின்னலுடன் கொட்டி தீர்க்கும் மழையானது, இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயல் சின்னமாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்பாகவே, கிழக்கு திசையில் இருந்து வீசி வரும் காற்றின் சாதகப் போக்கின் காரணமாக தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் தினசரி கனமழையானது பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், கிழக்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதம் நிறைந்த காற்றின் சாதக போக்காலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்திய வானிலை முன் கணிப்புகளின் அடிப்படையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, புயல் சின்னமாக மாறும்போது சென்னைக்கு வட திசையில் உள்ள ஆந்திர கடலோரத்தை நோக்கி நகர்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் சுழற்சி மற்றும் நகர்வின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை தரவுகள் விளக்குகின்றன.

ஏற்கனவே சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், அடுத்த இரு தினங்கள் டெல்டா பகுதிகளிலும், டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும் என வானிலை ஆர்வலர் ஸ்ரீதர், நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரித்தாலும், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே, வட தமிழக மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நடப்பாண்டுக்கான போதிய நீர் இருப்பை கொண்டுள்ளது. ஆகையால் சுழற்சி முறையில் ஏரிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. அதேபோல வானிலை முன் கணிப்புகளின் அடிப்படையில், சென்னையில் பெருவெள்ளம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement