கன மழை எச்சரிக்கை - தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!
கன மழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று (டிச.9) கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் பூங்கொடி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல மழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (9.12.2023) சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று 09.12.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார்.