கனமழை எச்சரிக்கை..., சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை அருகே கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது இதனால் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேலும், புயல் சின்னமானது அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டங்களில் 20 செமீ மேல் மழை பதிவாகும் அபாயம் உள்ளது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.