சென்னையை புரட்டிப் போட்ட கனமழை | இயல்புநிலை திரும்புவது எப்போது?
தமிழக தலைநகரை புரட்டிப்போட்ட அதி கனமழை.... மூன்று நாட்கள் ஆகியும், வடியாத வெள்ளத்தால் தொடரும் மக்களின் அவதி..... இயல்புநிலை திரும்புவது எப்போது....பார்க்கலாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை ஓய்ந்தாலும் இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, துரைப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், தனியார் படகுகள் மூலம் பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் வடியாததால் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தாம்பரத்தில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். முடிச்சூர் வரதராஜபுரம், அமுதன் நகர் பகுதியில் வெள்ள நீர்வடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சென்னையின் மிகவும் முக்கிய இடமான போயஸ் கார்டன் பகுதியிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அரும்பாக்கம் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை புறநகர் ரயில்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற நிலையிலே இயக்கப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளில் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தென் சென்னையில் இன்னும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை. பல வழித்தடத்தில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை.
மின் கம்பங்கள் சேதமடைந்தும், மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாலும் சீரமைப்பிற்கு பிறகே மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தரமணியில் பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கூவம் ஆறானது கடலில் கலக்கும் பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஓய்ந்தாலும் தேங்கிய மழைநீர் வடியாததும், உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததாலும் மக்கள் தீராத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.