ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், நீலகிரியில் மண்சரிவு, மரங்கள் விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர்
மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். அதேபோல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. ஆனால் வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 24 சென்டிமீட்டர் மழையும், குன்னூரில் 7.10 சென்டிமீட்டர் மழை பதிவாகிய நிலையில் கனமழையால் குன்னூர் நகர் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனிடையே ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 7க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டும் மரங்கள் விழுந்தன.
அதேபோல் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள குஞ்சப்பனை பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட்டதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி பயணிகளுடன் வந்த இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் கனரக லாரி சேற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, கோத்தகிரி மேட்டுபாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மற்றும் குன்னூர் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி கோவை, மற்றும் நீலகிரி ஆகிய இரு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை என அனைத்து துறையினரும் இணைந்து பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான கோத்தகிரி இருந்து கரிக்கையூர் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தேயிலைச் செடிகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் 7க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செம்மனரை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள பழங்குடியின கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாலும் கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தொடர்ந்து பெய்யும் இந்த வடகிழக்கு பருவ மழையினால் சேதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு ஒரே இரவில் பெய்த பருவ மழையால் குன்னூர், கோத்தகிரி பகுதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அடர்ந்த வனப்பகுதியின் நடுவே வசிக்கக்கூடிய பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் நிலச்சரிவு, தரைப்பலங்களில் காற்றாற்று வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மட்டுமல்லாமல் சுற்றுலா வளர்ச்சியால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலை பாதையில் பயணித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மலைப்பாதையில் அபாயகரமாக உள்ள பாறைகற்கள் மற்றும் மண் சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணங்களை மேற் கொள்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.