தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து - மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!
கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் : “மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் அதி கனமழையால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் நேற்று மின்சாரம் முழுமையாக தடைபட்டது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வந்தே பாரத் உள்ளிட்ட 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பேருந்து வழியாக வெளி ஊர்களுக்கு செல்ல பயணிகள் தொடங்கியுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாள்தோறும் சராசரியாக 150 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், சராசரியாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால், மதுரை பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.