தொடர்மழை எதிரொலி - நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை வரும் 25-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்யும் போது, மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படுவதும், இதனால் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: தோனி, ரெய்னா சந்திப்பு – சமூகவலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!
உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு நவ. 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையும், மீண்டும் நவ.9 -ம் தேதி முதல் 18-ம் தேதி வரையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மலை ரயில் பாதையில் சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த நிலையில், 10 நாட்களுக்குப் பின்னர் கடந்த 19-ம் தேதி முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது.
இதனிடையே ரயில் வழித்தடத்தில் பாறைகள் சரிந்துள்ளதால், சீரமைப்பு பணிகளுக்காக ரயில் சேவை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அடர்லி, ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் நவம்பர் 25-ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.