அதிகனமழை எதிரொலி - நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!
அதிகனமழை எதிரொலியாக நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : தொடரும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
முன்னதாக 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதையடுத்து நெல்லையில் இருந்து செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில், திருச்சி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் என அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திருநெல்வேலி வரக்கூடிய ரயில்களும், திருநெல்வேலி மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களும் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.