மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு!
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 22 ஆம் தேதி புதன்கிழமை இரவுமுதல் அதிகனமழை பதிவாகியுள்ளது.
இதையும் படியுங்கள்:சென்னையில் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
இந்த பருவமழை தொடங்கிய பிறகு அதிகபட்சமாக நவம்பர் 22 ஆம் தேதி ஒரே நாளில் மேட்டுப்பாளையத்தில் மட்டும் 373 மிமீ அதிகனமழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் குன்னூர், கோத்தகிரி சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், மரங்கள் விழுந்துள்ளதாலும் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை இடையே செயல்படும் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.