திருப்பத்தூரில் கனமழை: மரம் முறிந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 30 கிராம மக்கள் அவதி..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தென்னை மரம் மின் கம்பத்தில் சாய்ந்து விழுந்து, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில், திடீரென ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை பெய்தது. இந்த கனமழையினால் தோட்டாளம் பகுதியில் இருந்த சுமார் 50 அடி உயரம் கொண்ட தென்னை மரம் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தின் மீது சாய்ந்து சாலையில் விழுந்தது.
இதனால் மின்துண்டிப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து வடகாத்திப்பட்டி துணை மின் நிலைய துணை மின் பொறியாளர் மற்றும் மின்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். ஆனால் சாலையில் சாய்ந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் தென்னை மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் அவ்வழியாக குளிதிகை, ராசம்பட்டி, சாந்திநகர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் சாலையில் சாய்ந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் தென்னை
மரத்துக்கடியில் ஆபத்தான முறையில் பயணம் செல்லக்கூடிய சூழல் நிலவி வந்தது.
தொடர்ந்து மின்துறை அலுவலர்களை அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்ட போது, பொது
மக்களுக்கு பதில் அளிக்காமல் அலட்சியமாக போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாக மாதனூர், தேவிகாபுரம்,தோட்டாளம், குருதிகை, வெங்கிலி, பச்சகுப்பம், வடகாத்திப்பட்டி, கூத்தம்பாக்கம், பாலூர், புதூர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருளில் மூழ்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெளிச்சத்திற்காக விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மாணவர்கள் கல்வி கற்க கூடிய சூழலும், வணிகர்கள் வியாபாரத்தில் ஈடுபட கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.