For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் 2 நாட்களாக வெளுத்து வாங்கும் கன மழை | பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் முடக்கம்!

09:20 AM Nov 30, 2023 IST | Web Editor
தமிழகத்தில் 2 நாட்களாக வெளுத்து வாங்கும் கன மழை   பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் முடக்கம்
Advertisement

இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் முடங்கியுள்ளன. என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Advertisement

வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதை 2 நாட்களில் நடந்த பல்வேறு சம்பவங்கள் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. குறிப்பாக சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் வேளச்சேரி சாலைகளில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி, சாலை கடல் போல் காட்சியளிப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவ்வழியே சென்ற வாகனங்கள் பழுதடைந்து சாலையில் நின்றது வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கியது.

அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆரணி நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆரணி, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளதால் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளதால் உப்பளத் தொழில் முழுவதுமாக முடங்கியுள்ளது. சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில், உப்பளத் தொழிலை நம்பி உள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது.

அதேபோல விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள், பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டு, தொழிலை நம்பி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement