கனமழை எதிரொலி | முதுமலை புலிகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடல்!
கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஒடிசா மாநிலம் புரிக்கு அருகில் கரையை கடக்கக்கூடும்.
இதனால், இன்று ஓரிரு இடங்களில் இடி ,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 21 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 19-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 22 செ.மீ., விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 13 செ.மீ., மேல்பவானியில்12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 செ.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 10 செ.மீ.,எமரால்டில் 9 செ.மீ., தேவாலா, பார்வூட், நடுவட்டம், கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனாவில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதானால், முதுமலை புலிகள் மற்றும் யானைகள் காப்பகம் 3 நாட்களுக்கு (ஜூலை 22 வரை) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, மரங்கள் விழுவது ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகன சவாரி நிறுத்தப்படுவதுடன், யானை முகாமும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.