For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: நீர் வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக உயர்வு!

11:57 AM Nov 23, 2023 IST | Web Editor
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை  நீர் வரத்து விநாடிக்கு 4 000 கன அடியாக உயர்வு
Advertisement

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. 

Advertisement

முல்லைப்பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி, பெரியாறு அணையில் 16.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 13.6 மி.மீ., மழையும் பெய்தது.  அதனால் அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 1,283.75 கன அடியாக இருந்தது. 

இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 30.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 384 மி.மீ., மழையும் பெய்தது.  இதனால் அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 4,117.64 கன அடியாக உள்ளது. ஒரே நாளில் 2,834 கன அடி தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.  தமிழக பகுதிக்கு அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மின் உற்பத்தி

அணையிலிருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்னாக்கிகளில் தலா 30 மெகாவாட் என 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  கட்டுக்கட்டாக பணம்…அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!

அணை நிலவரம்

முல்லைப்பெரியாறு அணையில் வியாழக்கிழமை நீர் மட்டம் 134.90 அடியாக உள்ளது.  (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 5,842.70 கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 4,117.64 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1000 கன அடியாகவும் உள்ளது. 

142 அடியாக உயர்த்த கோரிக்கை

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது;  முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.  அணையின் தமிழக நீர் பிடிப்புப் பகுதிகளான சிவகிரி சுந்தரமலை, சேத்தூர் சாஸ்தா கோயில் அணை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை 5 மணிக்கு தொடங்கிய மழை வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்துள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை 142 கன அடியாக உயர்த்த வேண்டும். ஆனால் பெரியாறு பாசன கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன் பெரியாறு அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டு நீர்மட்டம் உயரவிடாமல் தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறோம்.  இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

Tags :
Advertisement