கயானா மைதானத்தில் விடாத மழை - Ind vs Eng போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்!
இந்தியா இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டன. முக்கியமாக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே தகுதிபெறாமல் வெளியேறியது.
அரையிறுதியின் முதல் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 56ரன்களுக்கு சுருண்டனர். இதன் பின்னர் சொற்ப ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களிலேயே வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கால் பதித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. இன்று இரவு 8மணிக்கு போட்டியானது புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று மாலை வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானாவின் புரொவிடன்ஸ் மைதானத்தில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் போட்டி நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - இடையேயான கடைசி அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 7:30 மணிக்கு டாஸ் போடப்படும். ஆனால் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.