தூத்துக்குடியில் பெய்த கனமழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக தூத்துக்குடி வஉசி சாலை, பழைய மாநகராட்சி, பேருந்து நிலையம்,
மூன்றாவது மைல், பிரைன் நகர் திரேஸ்புரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில்
தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது வெப்பம் குறைந்து
குளிர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.