தொடர் கனமழை - ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல் வெளிக்குள் புகுந்த மழை நீர்!
ஆலங்குளம் பகுதியில் தொடர் மழை பெய்து வரும் காரணமாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிணறுகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. தொட்டியான் குளத்தின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை (டிச.17) இரவு நிரம்பியது.
இதையும் படியுங்கள் : “உங்களுக்கு வீடு தர முடியாது..” - கர்நாடகாவில் அரங்கேறும் சாதிய பாகுபாடுகள்!!
இந்நிலையில், குளத்தின் கரை, நான்கு வழிச் சாலைப் பணிக்காக பலவீனப்படுத்தப்பட்டதால், அது வலுவிழந்து திங்கள்கிழமை (டிச.18)காலை உடைந்தது. இதனால் குளத்தில் தேக்கி வைக்கப்பட்ட நீர், வெள்ளமாக திருநெல்வேலி தென்காசி சாலை வழியே அருகில் உள்ள வயல்வெளிக்குள் பாய்ந்தது.
இதனால் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்தன. அருகில் வீடுகள் குறைந்த அளவே இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. வெள்ளம் காரணமாக திருநெல்வேலி தென்காசி பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.