சென்னை கடும் பனிமூட்டம் விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஜன.31 முதலே கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இன்று காலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால், இன்று கோலாலம்பூரில் இருந்து சென்னை வர வேண்டிய விமானமும் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் கொழும்பு, டெல்லி, துபாய் செல்லும் விமானங்களும் 20 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டன.
சென்னையில் நிலவிவரும் கடும் பனி மூட்டம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பனி அதிகமாக இருக்கும் பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரயிலை இயக்குமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், மற்றும் சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.