“வெப்பஅலை தாக்கம் மாநில பேரிடராக அறிவிக்கப்படும்!” - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!
தமிழ்நாட்டில் வெப்ப அலை அதிகரித்து வரும்நிலையில், வெப்ப அலை தாக்கம் மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
அதன் பிறகு சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன.
தேர்தல் முடிவடைந்ததையடுத்து மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 24) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
“கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது சென்னையே வெள்ளத்தில் மிதந்தது. ஆனால் தற்போது மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் மழை என அனைத்தையும் பிரச்னையின்றி முதலமைச்சர் சமாளித்துள்ளார்.
மேலும் மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்த நிலையிலும் முதலமைச்சர் நேரடியாக சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டார். திருநெல்வேலியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய நிதியமைச்சர் நேரடியாக வந்து பார்வையிட்ட போதும், எந்த நிதியும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படவில்லை. மிக்ஜாம் புயலின் போதும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்ட போதும், நிதி வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதுவரை, வெப்ப அலை தாக்கம் என்பது வந்ததில்லை. இந்த முறை வெப்ப அலை தாக்கம் வந்துள்ளது. வெப்ப அலையின் தாக்கத்தையும் இனி பேரிடராக கருத்தில் கொள்வோம்” என தெரிவித்தார்.