மே முழுவதும் வெப்ப அலை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
மே மாதத்திலும் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த வருடம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் வெப்ப அலை வீசியது. இந்நிலையில் மே மாதம் முழுவதும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்ஜெய் மஹோபத்ரா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;
நாட்டின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக வெப்ப அலை வீசியது. இதன் தாக்கம் காரணமாக, சில மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தன. மக்களுக்கு உடல் நலன் சார்ந்த எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
இதே நிலை மே மாதத்திலும் தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக தெற்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம், விதர்பா, மரத்வாடா, குஜராத் மாநிலப் பகுதிகளில் 8 முதல் 11 நாள்கள் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி, உத்தர பிரதேசம், சத்தீஸ்கரின் சில பகுதிகள், ஒடிஸா மாநில உள் மாவட்டங்கள், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார், கர்நாடக மாநில வட உள்மாவட்டங்கள், தெலங்கானா ஆகிய மாநிலப் பகுதிகளில் 5 முதல் 7 நாள்கள் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.
மழை :
மே மாதத்தில் வழக்கமான (91 முதல் 109 சதவீத மழைப் பொழிவு) மழைப் பொழிவுக்கான வாய்ப்பும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமேற்கு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள், மத்திய மாநிலங்களின் சில பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் வழக்கமானது முதல் வழக்கத்தைவிட சற்று கூடுதலான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.