Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

07:03 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையில், அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என்பதாலும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கூறி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (14.02.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின் போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின் போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்றார்.

பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அமலாக்க துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது, ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா எனவும் மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் சுட்டிக்காட்டினார்.

கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என வாதிட்டார்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது எனவும் அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதாக வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் குறிப்பிட்டார்.

இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வெளிநாடுகளுக்கு தப்பி விடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதத்தை நிறைவு செய்தார்.

அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன என்றார்.

பின்னர், அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நாளை (பிப்ரவரி 15) பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

Tags :
appealBailMadras High CourtMinisternews7 tamilNews7 Tamil UpdatesPetitionSenthil balaji
Advertisement
Next Article