தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு , கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வந்தது.
நீதிபதிகள் அசாதுதீன் அமனுல்லா, எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் இவ்வழக்கில் பதில் அளிக்க 2 வார கால அவாகாசம் கோரப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர். மேலும் அடுத்த விசாரணை வரை சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், ஏன் இந்த வழக்கில் கூடுதல் பிரமாண பக்கம் தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்கிறீர்கள் ? என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பினர். அத்துடன், கால அவகாசம் கேட்டு வழக்கை ஒத்திவைப்பதாகவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அடுத்தமுறை எந்த காரணமும் கூறக்கூடாது எனவும் தெரிவித்தனர்.