இன்றுடன் ஓய்வு பெறும் டிராவிட் - கோப்பையை வென்று சமர்பிக்குமா இந்திய அணி?
ராகுல் டிராவிட் பதவி காலம் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் உலக கோப்பையை வென்று டிராவிட் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டன. முக்கியமாக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே தகுதிபெறாமல் வெளியேறியது.
அரையிறுதியின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 56 ரன்களுக்கு சுருண்டனர். இதன் பின்னர் சொற்ப ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களிலேயே வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கால் பதித்துள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்து அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆட்டம் நடைபெறும் கயானா மைதானத்தில் பலத்த மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 7விக்கெட் இழப்பிற்கு 171ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 172இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.4ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 103ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 68ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் இன்று விளையாடுகின்றன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நாளை நடைபெறும் போட்டியுடன் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடையுள்ள நிலையில் உலக கோப்பையை வென்று டிராவிட் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.