“மக்களுக்காக போகாதவர், குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்!
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தீர்மானிக்கும் திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பு அமைக்கக்கப்பட்டது. நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், அதன் தலைவராக உள்ள பிரதமர் மோடி தலைமையில் கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்றது.
இந்த கூட்டதில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டபோது, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கு உரிய நிதி ஒதுக்கவில்லை என அக்கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்த நிலையில் வருகிற மே 24 ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. எப்போதும்போல் அனைத்து மாநில முதலமைச்சர்களும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியான தகவல் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய வேந்தர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார். அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார். இன்று டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.