“எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்”... ஆந்திராவில் மூட நம்பிக்கையால் முதியவர் எரித்துக் கொலை!
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம், அரக்கு வனப்பகுதியில் உள்ள லொட்டேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தொம்பிரிகுடா கிராமத்தை சார்ந்தவர் அடாரி தொம்புரு (60).
தொம்பிரிகுடா கிராமத்தில் 15 வீடுகள் உள்ள நிலையில், அவற்றில் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் அடாரி தொம்புரு குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று உயர்நிலையில் இருந்து வந்தது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு, மனிதர்களுக்கே
உரிய பொறாமை அடாரி தொம்புரு குடும்பத்தின் மீது ஏற்பட்டது.
மேலும் தங்களுடைய குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் இருப்பதற்கு காரணம் அடாரி தொம்புரு என்று அவர்கள் கருதினர். அடாரி தொம்புரு அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று மாந்திரீகம் செய்ய கற்று
வந்து, செய்வினை செய்து தங்களை பொருளாதார ரீதியாக உயர இயலாமல் தடுக்கிறார் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.
எனவே அவரை பழி வாங்க முடிவு செய்த கிராம மக்கள், அடாரி தொம்புரு வீட்டிற்கு சென்று, அவரை வெளியில் இழுத்து வந்து கற்கள், கட்டைகள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கி, பாட்டிலில் உடன் எடுத்து வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்தனர். வலி தாங்காமல் அலறி துடித்த அடாரி தொம்புரு சற்று நேரத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அடாரி தொம்புரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.