”இளம் வயதிலேயே எம்.எல்.ஏ என்னும் பொறுப்பை ஏற்றவர்” : செங்கோட்டையன் இணைப்பு குறித்து விஜய் வீடியோ...!
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த வந்த செங்கோட்டையன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். இதனால் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து செங்கோட்டையனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனிடையே நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார்.
கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனுக்கு ஈரோடு,கோவை,நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
” 20 வயது இளைஞராக இருக்கும் போதே புரட்சித்தலைவர் எம்.ஜி.யார் அவர்களை நம்பி அவரின் மன்றத்தில் சேர்ந்தவர். இளம் வயதிலேயே எம்.எல்.ஏ என்னும் பெரிய பொறுப்பை ஏற்றவர், அவருடையே பயணத்தில் அக்கட்சியின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த செங்கோட்டையன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.
அவர்களுடைய அரசியல் அனுபவமும், அவர்களுடைய அரசியல் களப் பணியும் தவெகவிற்கு ஒரு பெரிய உறுதுணையக இருக்கும் என்று நம்பிக்கையுடன், செங்கோட்டையன் அவர்களையும் அவரோடு தவெகவில் இணைந்திருக்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.
யார் இந்த செங்கோட்டையன்
தமிழ் நாட்டின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் செங்கோட்டையன். இவர் எம்.ஜி.ஆரால் 25 வயதிலேயே அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் . இன்று வரை 9 முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதிலும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்எல்ஏவாக இருந்து சாதனை படைத்துள்ளார். 3 முறை அமைச்சராகவும் பதவியையும் அலங்கரித்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு நல்ல விசுவாசியாக இருந்தார். மேலும் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத்தை திட்டமிடுவதில் முக்கிய நபராகவும் செங்கோட்டையன் இருந்துள்ளார். இந்த நிலையில் செங்கோட்டையனின் வருகை த.வெ.கவுக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.