“திமுக பத்தாண்டு காலம் தோல்வியை சந்திக்கவில்லையா?” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அதிமுகவில் தொண்டர்கள் கூட முதலமைச்சர் ஆகலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் இன்று (24.11.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
“இந்த விழாவினை அதிமுகவின் குடும்ப விழாவாக பார்க்கிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் நான் முதலமைச்சராக இருந்த பொழுதே நூற்றாண்டு விழா கொண்டாடினேன். நான் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதுவரை எந்த கட்சித் தலைவருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டது இல்லை.
ஒரு கட்சித் தலைவருக்கு தமிழ்நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதென்றால் அது அதிமுகவில் மட்டும்தான். நான் பொதுச் செயலாளராக இருக்கும் இந்த நேரத்தில், ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜானகி உள்ளிட்டோரின் நூற்றாண்டு விழாக்களை எடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது.
எம்ஜிஆருக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜானகி அம்மா. எம்ஜிஆர் சட்டமன்றத்தில் பேசி முடித்த போது கடைசியாக குறிப்பிட்டது, நீங்கள் எவ்வளவு அவமான படுத்தினாலும் இந்த ராமச்சந்திரன் கவலைப்பட மாட்டான். மீண்டும் சட்டமன்றத்தில் நுழையும்போது மக்களின் ஆதரவோடு நுழைவேன் என்றார். அதுபோல ஆட்சிக்கு வந்தார்.
அன்று கட்சி தொடங்கிய போது எம்ஜிஆர் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாரோ, அதே பிரச்னைகளை அம்மாவும் சந்தித்தார். அதேபோல தற்பொழுது நானும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். முடக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை காட்டி வருகிறோம். எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. அதே போல எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து தோல்வி உற்றதும் கிடையாது. வெற்றி, தோல்வி இரண்டும் உண்டு. ஏன் திமுக பத்தாண்டு காலம் தோல்வியை சந்திக்கவில்லையா?
திமுக ஒரு குடும்ப கட்சி என்று சொல்வார்கள். ஆம் அது குடும்ப கட்சி. கருணாநிதி என்ற உறுப்பினரின் குடும்ப கட்சி. ஆனால் அதிமுகவில் கடைசி தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம். அதிமுக குடும்ப கட்சி அல்ல. சுமார் 31 ஆண்டு காலம் நல்லாட்சி தந்த கட்சி அதிமுக என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றால், அதற்கு காரணம் அதிமுக போட்ட திட்டங்கள். அதனால் மக்கள் பெற்ற நன்மைகள் தான். கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் என்று சொன்னால், அது எம்ஜிஆரின் கைதான்.
கோயிலாக நாம் வணங்கிய கட்சி அலுவலகத்தை சிலர் இடிக்க முயன்றார்கள். அவர்களை கடவுள் பார்த்து கொள்கிறார். மத்திய அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு கொடுத்த பாரத ரத்னா விருதை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி அம்மா பெற்று கொண்டார். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. இன்னும் தேர்தலுக்கு சில காலங்கள் தான் இருக்கிறது. மறைந்த முதலமைச்சர் அம்மா மற்றும் மறைந்த எம்ஜிஆர் அவர்களின் பணியை தொடர்வதற்கு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.