எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘லால் சலாம்’? - ஒர் அலசல்!
உலகம் முழுவதும் லால் சலாம் திரைப்படம் இன்று வெளியானது. இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். பல எதிர்பார்ப்புகளை அள்ளி திணித்த ‘லால் சலாம்’ எப்படி உள்ளது என்பது குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்...
மொய்தீன் பாய் [ரஜினிகாந்த்] மற்றும் அவரது நண்பர் லிவிங்ஸ்டன் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஊரும் இந்து - முஸ்லீம் என பாகுபாடு பார்க்காமல் அண்ணன், தம்பி போல் வாழ்ந்து வருகிறார்கள். இதில் ரஜினிகாந்த் மூலமாக துவங்கப்பட்ட கிரிக்கெட் அணி தான் 3 ஸ்டார். வெற்றிக்கு மட்டுமே பேர்போன இந்த அணியில் விளையாடி வந்த விஷ்ணு விஷால் திடீரென இதிலிருந்து வெளியேறி MCC என்ற அணிக்கு கேப்டன் ஆகிறார். இன்னொரு பக்கம் ரஜினியின் மகனாக விக்ராந்த் நடித்து உள்ளார். இவரும் விஷ்ணுவும் சிறு வயது முதலே எதிரும் புதிரும் என இருந்தனர். இந்நிலையில் 3 ஸ்டார் அணிக்காக விக்ராந்த் விளையாடுகிறார். இங்கு தொடங்கும் பிரச்னை எங்கே முடிகிறது என்பது தான் படத்தின் மீதி கதை.
நடிப்பு:
படத்தில் நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செந்திலை வைத்து தான் படத்திற்கான முக்கிய கதை ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் செந்தில் இறந்த பிறகு அந்த பொறுப்பும், பதவியும் தம்பி ராமையாவுக்கு போக அவருடைய நடிப்பும் அற்புதமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த படம் அவருக்கு கும்கிக்கு பிறகு பெயர் சொல்லும் படமாக இருக்கும். விஷ்ணு விஷால் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். விக்ராந்த் வெகு நாட்கள் கழித்து இந்த படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால் இது ரஜினிகாந்தின் படம் என்றும் சொல்லலாம். ஆனால் படத்தில் முக்கிய நிகழ்வுகளை எல்லாம் ரஜினிகாந்த் கொண்டு செல்கிறார். அதேபோல் ஜீவிதா நிரோஷாவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அற்புதமாக செய்திருக்கிறார்கள்.
இசை:
90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கேட்டது போல ‘லால் சலாம்’ திரைப்படம் இருந்தது. முக்கியமாக ‘ஜலாலி’ பாடலும், ‘தேர் திருவிழா’ பாடலும் தியேட்டரில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இயக்கம்:
3, வை ராஜா வை என்ற படத்தின் வரிசையில் இடம்பெற்றுள்ள லால் சலாம் படத்திற்கு திரைக்கதை மற்றும் இயக்கம் செய்துள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 1990களில் நடப்பது போல் படத்தின் கதை அமைந்துள்ளதால், அதற்கு தகுந்தார் போல் காட்சிகளை அமைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது போன்ற மத நல்லிணக்கத்தையும், விளையாட்டில் நடக்கும் அரசியல்களையும் தைரியமாக ஒரு படமாக இயக்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு வாழ்த்துக்கள்.
படம் கூறும் விசயங்கள்
திருவிழா - நம் ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் சிறப்பு திருவிழாவிற்கு உண்டு.
மத நல்லிணக்கம் - இப்படத்தில் சிறிய கிராமத்தில் நடக்கும் இந்து, முஸ்லிம் சண்டையை மையமாக வைத்து இதில் மதம் என்பது வேறு வேறு இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரத்தம் தான் உடம்பில் ஓடுகிறது என்று எடுத்து கூறுகிறது இந்த படம்.
நட்பு - சாதி மதம் பார்க்காது கடைசி வரை கூடவே இருப்பது தான் முக்கியம் என்பது படத்தின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
சூழ்ச்சி - தனி மனித அரசியல் காரணத்திற்காக அதை விளையாட்டிலும், மதத்திலும், மக்களிடையேயும் திணிப்பதே இப்படத்தின் சூழ்ச்சி.
படம் பற்றிய அலசல்
படத்தின் முதல் பாதி சிறிது சுருக்கமாக இருந்திருக்கலாம் எனவும், காட்சிகள் சீறாக அமையவில்லை என கருத்து கூறப்படுகிறது. இரண்டாம் பாதியில் கதைக்கு தகுந்தார் போல் காட்சிகள் அமைந்தது படத்திற்கு மேலும் மெறுகூட்டியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ஏற்கனவே கேட்ட வசனங்களாக இருந்தாலும் அவை ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. குறிப்பாக நல்ல நல்ல கருத்துக்கள் இருக்கக்கூடிய வசனங்கள் எல்லாம் ரஜினிகாந்திற்கு அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் படத்தை சரியான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படமாக ‘லால் சலாம்’ திரைப்படம் அமைந்துள்ளது.