”வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”- கனிமொழி கேள்வி!
மக்களவையில் இரண்டாவது நாளாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாத்தத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்களின் போது காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து அவர் விமர்சித்தார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் நேருவே காரணம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக மக்களவை உறுப்பினர் பேசினார். அவர்,
”பா.ஜ.க முதன்முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து குழுவின் தலைவர்களாக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. தீவிரவாத தாக்குதலில் உயிர்பலி ஏற்பட்டதால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையில் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுவதில் மட்டுமே குறியாக இருந்தார். வாக்காளர் சிறப்பு திருந்தம் போன்ற வழிகளில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முயல்கிறது” என விமர்சித்தார்.
மேலும் அவர், "தமிழன் கங்கையை வெல்வான்" என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிரதமருக்கு சோழர்கள் மீது தேர்தல் சமயத்தில் பாசம் ஏற்பட்டுள்ளது. சோழர்கள் மீது பாசம் காட்டிக் கொள்பவர்கள், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட ஏன் தயங்குகிறார்கள் ?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், “ தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த இழப்பீடு எதுவும் மத்திய அரசு வழங்கவில்லை தீவிரவாதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. காஷ்மீர் சுற்றுலாவை மட்டுமே நம்பி உள்ளது. பஹல்காம் தாக்குதலால் காஷ்மீரில் 13 லட்சம் பேர் முன்பதிவுகளை ரத்து செய்தனர். இதனால் ஏற்பட்ட இழப்புக்கு என்ன இழப்பீடு வழங்கப்பட்டது? பகல்காம் தீவிரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முந்தைய காலங்களில் நடந்ததை குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு, தற்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து பேசுங்கள். எதிர்கட்சிகள் உங்களுக்கு ஆதரவாக நின்றாலும், நீங்கள் எங்களை நம்புவதில்லை. கர்னல் சோபியா குரோஷி மீது மத்தியப்பிரதேச பா.ஜ.க அமைச்சரின் விமர்சனம் மிக மோசமானது. இது போன்று பேசியவர்களை ஏன் கண்டிக்கவில்லை?
இந்தியாவில் வெறுப்பு பேச்சு 74% வரை உயர்ந்துள்ளத சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற முயலும் அரசு இந்தியாவில் ஏன் பிரிவினையை விதைக்கிறது? நீங்கள் விதைக்கும் வெறுப்புகளை வேரறுக்க வேண்டும்.
வெளிநாட்டு தலைவர் (டிரம்ப்) 25 முறை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததாக கூறுகிறார். ஆனால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன? மத்திய அரசு ஏன் அமைதியாக உள்ளது ? தீவிரவாத தாக்குதலுக்காக பாகிஸ்தானை எந்த நாடாவது கண்டித்ததா ? இலங்கை அரசு தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்கிறது அதனை தடுக்க முடியவில்லை. இதுதான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையா? வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.