#Haryana | விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் மீது டிராக்டர் மோதியதாக பரவும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Factly’
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தின்போது, பெண்கள் மீது டிராக்டர் மோதியதில் இருவர் உயிரிழந்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஹரியானா-பஞ்சாப் ஷம்பு எல்லையில் 9 மாதங்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ளனர் (இங்கே, இங்கே, மற்றும் இங்கே). இந்த சூழலில், சாலையில் பல பெண்கள் மீது தண்ணீர் டேங்கர் வாகனம் மோதி அவர்களை இழுத்துச்செல்வது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த பதிவில், “இது சமீபத்தில் ஹரியானாவில் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) நடந்த சம்பவத்தை குறிக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஹரியானா அரசு தான் பொறுப்பு” என்று பகிரப்படுகிறது. இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு, “பெண் விவசாயிகளுக்கு எதிராக அரசு கொடூரம். (ஓம்) சின்னத்தை நினைவில் கொள்ளுங்கள். உ.பி.யில் புல்டோசர் ஜஸ்டிஸ் vs ஹரியானாவில் டிராக்டர் ஜஸ்டிஸ்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
இந்த வைரலான வீடியோவைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க, வீடியோவிலிருந்து கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்யப்பட்டது. இந்தத் தேடல், 28 ஜனவரி 2021 அன்று ட்விட்டர் (எக்ஸ்) இல் பகிரப்பட்ட அதே காட்சிகளைக் காட்டும் ஒரு வீடியோ கண்டறியப்பட்டது. வீடியோவின் தலைப்பில், “டிராக்டர் அணிவகுப்பின் போது வயதான இரண்டு பெண்கள் மீது டிராக்டர் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் மூவர் காயமடைந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலான வீடியோ சமீபத்தியது அல்ல என்பதை இது குறிக்கிறது.
ட்விட்டர் (எக்ஸ்) இல் உள்ள பதிவின் கமெண்ட் பிரிவில், இந்த சம்பவம் குறித்து 26 ஜனவரி 2021 தேதியிட்ட 'அமர் உஜாலா' செய்தி அறிக்கையை பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில் காட்டப்பட்டுள்ள டேங்கர் வைரலான வீடியோவில் உள்ளதை ஒத்திருக்கிறது. அறிக்கையின்படி, 26 ஜனவரி 2021 அன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது, பேரணியில் பங்கேற்ற பெண்கள் மீது கட்டுப்பாடற்ற டேங்கர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் அருகில் டேங்கர் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பெண்கள் மீது மோதியுள்ளது. இச்சம்பவத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். போலீஸ் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு டிராக்டர் ஓட்டத் தெரியாது என்பதும் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது.
மேலும் தேடுதலில், இந்த சம்பவம் பற்றி ஜனவரி 2021 இல் வெளியிடப்பட்ட பல செய்தி அறிக்கைகள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) கண்டறியப்பட்டது. அந்த அறிக்கையில், அமிர்தசரஸின் வல்லாவில் பேரணியில் பங்கேற்ற பெண்களின் மீது கட்டுப்பாடற்ற டேங்கர் எப்படி ஓடியது என்பதை விவரிக்கிறது. இந்த அனைத்து தகவல்களிலிருந்தும், வைரல் வீடியோ பழையது எனவும், ஜனவரி 2021க்கு முந்தையது மற்றும் இதற்கும் ஹரியானாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
முடிவு:
இதன்மூலம், அமிர்தசரஸில் நடந்த ஒரு விபத்தின் பழைய வீடியோ தற்போது ஹரியானாவில் நடைபெற்ற போராட்டத்துடன் இணைக்கப்பட்டு தவறான கதையுடன் பகிரப்படுகிறது என கண்டறியப்பட்டது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.