அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை! வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஹரியானா அரசு பள்ளிகளில் சுமாா் 4 லட்சம் போலி மாணவா்களின் சோ்க்கை மூலம் நிதி மோசடி நடந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் சுமாா் 22 லட்சம் மாணவா்கள் படித்து வருவதாக தரவுகள் தெரிவித்தன. ஆனால் அதில் 18 லட்சம் மாணவா்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிப்பதும், மீதமுள்ளவை (4 லட்சம்) போலி சோ்க்கை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
போலி மாணவா் சோ்க்கை மூலம் மோசடி செய்ததற்கு கண்டனம் தெரிவித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயா்நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டது. இந்த மோசடி தொடர்பாக 7 வழக்குகள் பதியப்பட்டன. தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் ஒரு வாரத்துக்குள் சிபிஐ-யிடம் ஒப்படைக்குமாறு நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையை அறிவுறுத்தினர். அதனுடன் 3 மாதத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதிகமான மனிதவளத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கின் விசாரணையை மாநிலக் காவல்துறையிடமே மீண்டும் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. சிபிஐயின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த மோசடி தொடர்பான சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.