தாயாரிடம் ஆசி பெற்றார் ஹரியானா முதலமைச்சர் NayabSinghSaini!
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
ஜம்மு – காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் அக்.5ம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும் (செப். 18, 25, அக்.1) நடைபெற்றது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் நேற்று (அக்.8) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ஹரியானா தொகுதியில் 48 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக வென்றுள்ளது. இதன்மூலம் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள முதல் கட்சி என்ற சாதனையை பாஜக படைத்துள்ளது. இந்நிலையில், லாட்வா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 16,054-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று முதலமைச்சர் நயாப் சிங் சைனி வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் :பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை | #Tamilnadu அரசு நடவடிக்கை!
இதையடுத்து, ஹரியானா முதலமைச்சர் நாயப் சிங் சைனி நேற்று இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்க பதிவில், "தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். அவர் என்னை திலகமிட்டு வாழ்த்தினார். தாயின் அன்பு, ஆசிர்வாதம் தான் வாழ்க்கைக்கு அமுதம்," என நயாப் சிங் சைனி பதிவிட்டிருந்தார்.