#Haryana - தூய்மைப்பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 46,000 பட்டதாரிகள்!
ஹரியானாவில் வேலையின்மை காரணமாக 46,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், தூய்மைப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் ஹரியானாவின் ‘ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகம்’ மூலம் 46,000க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், ஒப்பந்த அடிப்படையில், தூய்மைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வேலையின்மை காரணமாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாகவுமே பட்டதாரிகள் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதிமுதல் செப்டம்பர் 2ஆம் தேதிவரை 39,990 பட்டதாரிகள் மற்றும் 6,112 க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், 12 ஆம் வகுப்பு வரை படித்த 117,144 பேரும் விண்ணப்பித்துள்ளனர். HKRN மூலம் பணியமர்த்தப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும் என HKRN அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியானாவின் நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டதில் 11.2% ஆக அதிகரித்துள்ளது.
15 முதல் 29 வயதுடைய பெண்களுக்கான வேலையின்மை விகிதம் ஜனவரி-மார்ச் மாதங்களில் 13.9% ஆக இருந்தநிலையில், ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 17.2% ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் அனைத்து தரப்பினரின் வேலையின்மை விகிதம் ஜனவரி-மார்ச் மாதங்களில் 4.1% ஆக இருந்தநிலையில், ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 4.7% ஆக அதிகரித்துள்ளது.