4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ஹர்மன்பிரீத் கவுர்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இதன் முதலாவது போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.ஹர்மன்பிரீத் கவுட் இந்தியா தரப்பில் அதிகபட்சமாக 102 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 319 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடியது. 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 305 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 98 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் கிராந்தி கவுட் 6 விக்கெட் வீழ்த்தினார் இதன் மூலம் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 102 ரன்கள் (84 பந்து, 14 பவுண்டரி) விளாசினார். முன்னதாக 34 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 17-வது வீராங்கனை என்ற சிறப்பை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். இந்திய அளவில் மிதாலிராஜ், மந்தனா ஆகியோருக்கு பிறகு இந்த சாதனையை கடந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.