மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு!
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபில் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் வீரர்கள் அணி மாறுவதும், அதிரடி மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையானது.
இதன்படி இந்த சீசனுக்கான ஏலத்திலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். இந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் இருந்து, ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது மும்பை அணி நிர்வாகம். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 5 கோப்பைகளை வென்று கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.