'2025 ஆங்கில புத்தாண்டு' - குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!
ஆங்கில புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பலர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி மக்கள் ஆட்டம் ,பாட்டம் வாணவேடிக்கையுடன் உற்சாகமாக வரவேற்றனர். தமிழகம் முழுவதும் கோயில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆங்கில புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2025-ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் ! இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "2025-ம் ஆண்டு இனிதாக அமையட்டும்! இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், வெற்றி மற்றும் முடிவில்லா மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி:
ஆங்கில புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
ஆங்கில புத்தாண்டையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும்! கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் முதல்வர் ஸ்டாலினின் அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும்.
2026-இல், 7-ஆவது முறையாக திமுக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம். தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.