விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் - பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்!
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர், "விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" என பதிலளித்தனர். ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாகூர், "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்" எனக் கூறினார்.
மேலும், மாணவர்களை நோக்கி, "நாம் இன்றும் பாடப்புத்தகங்களில் காண்பதையே உண்மையாக ஏற்று வாழ்கிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் பாரம்பரியம், நம் கலாசாரம், நம் அறிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஆங்கிலேயர்கள் கற்றுக்கொடுத்த கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதற்கு அப்பால் சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள். அப்படிச் சிந்தித்தால் நம்முடைய வரலாற்றில் இன்னும் நிறைய உண்மைகள் தெரியும்" என கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் ‘முதலில் நிலவில் காலடி வைத்தவர் யார்?’ என்று கேட்டு, அது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் தான் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.
அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில் மாணவர்களை தவறாக வழிநடத்துவது, நமது அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளான அறிவு, பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அவமதிப்பதாகும். இந்தியாவின் எதிர்காலம் உண்மையை கட்டுக்கதையுடன் கலப்பதில் இல்லை; மாறாக, உண்மையை உண்மையாகவே கற்றுக் கொடுத்து, மாணவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.