‘ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்’ - இந்தியாவிற்கு வங்கதேசம் கடிதம்!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் டாக்காவிற்கு அனுப்புமாறு வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கதேசத்தில் அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தால், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இந்த இடைக்கால அரசு ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஹசீனா அவரது மாஜி அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப, டெல்லியில் உள்ள தூதரகத்திற்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம் அனுப்பியுள்ளது.