"தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்" - குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் தொழிலாளியின் மகன் கண்ணீர் மல்க கோரிக்கை!
"எனது தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்" என குவைத் தீவிபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்தில் சிக்கிய நபர்கள் காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்து குறித்து குவைத் போலீசார் கூறுகையில், ‘‘இந்த கட்டிடத்தில் தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் பலர் தங்கியிருந்தனர். தீயணைப்பு படையினர் உதவியுடன் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக புகையை சுவாசித்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர்’’ என்றனர். உயிரிழந்தவர்களில் 41 பேர் இந்தியர்கள் எனவும் அவர்களில் 25 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் குவைத் நாட்டில் ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடலை மீட்டு ராமநாதபுரம் கொண்டு வர குடும்பத்தினர் மத்திய மற்றும் மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
“ எனது தந்தை 25 ஆண்டுகளாக குறிப்பிட்ட நிறுவனத்திற்காக உழைத்தார். அவருடைய விசா 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 12ம் தேதி ஊருக்கு திரும்ப வேண்டும். சம்பள கணக்கு வழக்கு விவரங்களை முடித்து விட்டு புறப்படத் தயாராக இருந்தார். இந்த நிலையில் அறையில் அவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த தீ அறை கட்டடம் முழுவதும் பரவி பெரும் புகை மூட்டம் கிளம்பியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு எனது தந்தை உயிரிழந்துள்ளார். எனது தந்தையின் உடலை மீட்டு அவரை எப்படியாவது என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். அடுத்த இரண்டு நாட்களுக்குள் எப்படியாவது என்னுடைய தந்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.