அரசு ஊழியர்கள் தாமதமாக வேலைக்கு வந்தால் அரைநாள் விடுப்பு - மத்திய அரசு அதிரடி!
மத்திய அரசு ஊழியர்கள் தாமதமாக அலுவலகம் வந்தால் அரை நாள் விடுப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுவாகவே படித்து முடித்ததும் ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ண ஓட்டம் பெரும்பாலான மக்களின் மனதில் இருக்கும். காரணம் ஓய்வூதியம், விடுமுறை, அரசு சலுகை என பல உண்டு. அரசு வேலை என்பது உயர்வாக பார்க்கப்பட்டாலும், அரசு ஊழியர்கள் உயர்வாக பார்க்கப்படுவதில்லை.
காரணம் சில அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு காரணமாக அரசு ஊழியர்கள் என்றாலே தாமதமாக வேலைக்கு வருவார்கள், அலட்சியமாக வேலை நடைபெறும், லஞ்சம் என பல குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன. இதனை முறைப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் அலுவலகத்தில் இருந்து திரும்புதல் என கண்காணிப்பார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படுகின்றன. இதில் 15 நிமிடங்கள் சலுகை நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த சுற்றறிக்கையால் தாமதமாக அலுவலகம் வரும் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், சாமானிய மக்கள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.