ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் | துணை ஆட்சியர் உட்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு விசாரணைக் குழு இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை உத்திரப் பிரதேச அரசிடம் இன்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செய்த தவறே கூட்ட நெரிசல் ஏற்படு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 2 லட்சம் பேர் திரண்டிருந்த நிகழ்ச்சிக்கு, 80,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருப்பதும், அதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்கியிருப்பதுமே இந்த விபத்துக்கான காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமியார் போலே பாபா மீது இருநபர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, துணை ஆட்சியர் சிக்கந்தர் ராவ் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவ்பிரகாஷ் மதுகர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.