ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் 'போலே பாபா' பெயர் மிஸ்ஸிங்!
சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பெயரில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஹத்ராஸ், அலிகர் எட்டா பகுதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரதீய நியாய சன்ஹிதா பிரிவுகள் 105 (குற்றத்திற்குரிய கொலை, கொலைக்கு சமமானதல்ல), 110 (கொலை செய்ய முயற்சி), 126 (2) (தவறான கட்டுப்பாடு), 223 (முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) மற்றும் 238 (ஆதாரம் காணாமல் போனது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், அதில் போலே பாபாவின் பெயர் இல்லை என்று வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
80,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் குவிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினரான இவர்கள் அனைவரும் போலே பாபாவிடம் வந்தால் தம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டத்துக்கு வந்துள்ளனர். அனைவரது நம்பிக்கையும் வீணாகக் காரணமான போலே பாபா மட்டும் பிரச்சனையின்றி அங்கிருந்து தப்பியுள்ளார்.
நெரிசலில் பலியானவர்களில் பலரும் குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காதமையால் இறந்திருப்பதாகத் தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவில் மருத்துவர்கள் இல்லாமல் போனதும் காரணம் என கூறப்படுகிறது.