மயிலாடுதுறை அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் குரு பூஜை விழா!
மயிலாடுதுறை அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் குரு பூஜையை முன்னிட்டு 1,000 பேருக்கு அன்னம் பாலிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்ரீவாள் நெடுங்கண்ணி
சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் சுயம்புவாக
எழுந்தருளிய இவ்வாலயத்தில் சிறப்புலி நாயனார் அவதரித்து வாழ்ந்து முக்தி
அடைந்த தலமாகும். அதிதீவிர சிவபக்தராக திகழ்ந்த சிறப்புலி நாயனாரின் பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய இறைவன் நடத்திய திருவிளையாடல் காரணமாக ஒரு நாள் 1,000 பேருக்கு ஒருவர் குறைவாக 999 பேர் உணவு அருந்த வந்தனர்.
இதையும் படியுங்கள்: இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அப்டேட்!
அப்போது ஆயிரத்தில் ஒருவராக இறைவன் உணவு அருந்தி நாயனாருக்கு காட்சியளித்தார். இதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத பூராட
நட்சத்திரத்தில் அவதரித்த சிறப்புலி நாயனார் குரு பூஜையும், 1,000 அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கார்த்திகை மாத பூராட நட்சத்திரமான உற்சவரான ஆயிரத்தில் ஒருவர், சிறப்புலி நாயனார் வீதி உலா செல்லும் காட்சியும், தொடர்ந்து சிவவாத்தியம் முழங்க உற்சவரான ஆயிரத்தில் ஒருவர், சிறப்புலி நாயனாருடன் கோயில் வளாகத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து அன்னம் வைத்து, படையல் இட்டு மகா தீபாராதனை மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், அரசு வழக்கறிஞர் ராம சேயோன் மற்றும் திரளான சிவனடியார்கள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் . பின்னர் நெய்வேத்தியம் செய்யப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.