"குர்பாஸின் கருணை அவர் போட்டியில் அடிக்கும் செஞ்சுரியை விட சிறப்பானது" - சசி தரூர் நெகிழ்ச்சி!
குர்பாஸின் கருணை செயலானது அவர் போட்டியில் அடிக்கக்கூடிய சதங்களை விட சிறப்பானது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய பார்வையாளர்களின் ஆதரவு அதிகம் இருந்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர்களும் இந்திய மக்களுக்கு மிகுந்த அன்பைக் காட்டினர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ், அகமதாபாத்தில் தெருவோரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பணம் வழங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஏழைகளின் அருகில் 500-500 நோட்டுகளை வைத்த குர்பாஸ், விழித்திருந்த பெண்ணின் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு அமைதியாக காரில் கிளம்பினார்.
எந்த விளம்பரமும் இன்றி குர்பாஸ் செய்த இந்த செயலானது மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் காங். மூத்த தலைவர் சசி தரூர் தனது X தளத்தில் குர்பாஸை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"அகமதாபாத்தில் தெருவோரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மத்துல்லா குர்பாஸ் காட்டிய அன்பு வியக்க வைக்கிறது. அவரது இந்த செயல், அவர் கிரிக்கெட் போட்டியில் அடிக்கக்கூடிய எந்த சதத்தை காட்டிலும் மிகவும் சிறப்பானது. மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்! அவரது இதயத்துடன் சேர்ந்து, அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் செழிக்கட்டும்!"
இவ்வாறு சசி தரூர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.