மீண்டும் மீண்டுமா… #Trump பரப்புரையில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது!
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை மூன்றாவது முறையாக கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கியுடன் வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோசெல்லாவில் டிரம்ப் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் கடந்த12ம் தேதி மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்புறம் நின்று மக்கள் மத்தியில் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், பொதுக்கூட்ட நுழைவுவாயிலில் கருப்பு நிற காரில் வந்த 49 வயதுடைய வெம் மில்லர் என்ற நபரை சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், போலி நுழைவுச் சீட்டு உள்ளிட்டவை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர்.
இதையும் படியுங்கள் : பருவமழை முன்னெச்சரிக்கை | அதிகாரிகளுக்கு முதலமைச்சர் #MKStalin உத்தரவு!
கைது செய்யப்பட்டுள்ள மில்லர், முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றும், வலதுசாரி அரசாங்கத்தின் எதிர்ப்புக் குழுவினை சார்ந்தவராக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் பொதுக் கூட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப், பென்சில்வேனியாவில் கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, முதன்முறையாக துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவரது காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவரை கொல்ல முயற்சித்தவரை அமெரிக்க ரகசிய காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். இரண்டாவது முறையாக, புளோரிடா மாகாணத்தின் தனது கோல்ஃப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது, டிரம்பை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில், காயமின்றி டிரம்ப் தப்பியது குறிப்பிடத்தக்கது.