GT vs RR | சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி... ராஜஸ்தான் அதிரடி வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இதில் சாய் சுதர்சன் 39 ரன்களிலும், சுப்மன் கில் 84 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து களம் கண்ட வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், ராகுல் தெவாத்தியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் ஜோஸ் பட்லர் 50 ரன்களுடனும், ஷாருக் கான் 5 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி காட்டினர். சிக்ஸர்களை பறக்க விட்டு சதம் அடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களம் கண்ட நிதிஷ் ராணா 4 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களுடனும், ரியான் பராக் 32 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.