”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!
மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80 வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீத்தாராமன்,
”தமிழகத்தில் பிறந்து சில கருத்துக்களை அரசியலோடு மன வேதனையோடு பேசுகிறேன். தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என பிரதமர் பல காரியங்களை செய்கிறார். அருண் ஜெட்லியோ, மோடியே ஜிஎஸ்டி வரியை நிர்ணயம் செய்யவில்லை. எல்லா மாநில நிதியமைச்சரும் கலந்தாலோசித்து எடுத்த முடிவு தான் இந்த வரி குறைப்பு.
ஜிஎஸ்டி வரி என்பது நாட்டில் உள்ள குழந்தை முதற்கொண்டு இருக்கும். வரி குறைப்பு என்பது 140 கோடி மக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் இதனை புரட்சி என்கிறேன்.12, 28 சதவீதம் வரி இனி இருக்காது. 90 சதவீதம் பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. 2017ல் 65 இலட்சம் பேராக இருந்த ஜிஎஸ்டி பயன்பாட்டாளர்கள், இப்போது 1.51 கோடியாக பயன்பாட்டாளர்கள் மாறி உள்ளனர். காங்கிரஸ் ஜிஎஸ்டி பற்றி கூறியதை உண்மை என ஏற்றிருந்தால் 1.51 கோடி பேர் ஜிஎஸ்டி பயன்பாட்டாளராக உயர்ந்திருக்க மாட்டார்கள்.
ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைக்கிறது. வரி மூலம் பணம் வரவில்லை எனில் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் 2 லட்சம் கோடி மக்கள் கையில் இருக்கும். குறையும் வரி மூலம் நிறைய பொருட்களை மக்கள் வாங்குவார்கள். இதனால் வேலை வாய்ப்பு ஏற்படும். இதனால் ஏற்றுமதி இறக்குமதி உயரும். இதனால் பொருளாதாரம் உயரும்”
என்று தெரிவித்தார்.