ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமல் - வரி தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு!
நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் இன்று குறைய உள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி நிறுவனங்களுக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.